மக்கள் நீதி மையம் கட்சியின் இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே தனியார் விடுதி கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மக்கள் நீதி மையம் இளைஞரணி மாநில செயலாளர் சினேகன், கட்டமைப்பு, சார்பு அணிகள் பொதுச்செயலாளர் முருகானந்தம், இளைஞரணி துணைச் செயலாளர் டாக்டர் முகம்மது உசேன், செய்தி மற்றும் ஊடகப்பிரிவு மாநில துணைச் செயலாளர் ஜீவா, கரூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் இளங்கார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமான இளைஞரணி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சினேகன் செய்தியாளர்களிடம் விளக்கினார்.
அப்போது அவர் கூறுகையில், "எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் வாக்காளர்களை பாதுகாக்க வேண்டும், வாக்குச்சாவடிகளை பாதுகாக்க வேண்டும், வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 10 நாட்களுக்கு ஒரு செயல் வடிவமைப்பை முன்னெடுத்துச் செல்ல இளைஞர் அணிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மையம் தலைவர் கமல் விரைவில் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளார். இதற்கான கள ஆய்வையும் இளைஞர் அணியினர் மேற்கொள்ள உள்ளனர். இந்த பிரசாரத்தை எழுச்சி மிக்க வகையில் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. கமல் மேற்கொண்ட முதல் கட்ட பிரச்சாரம் இளைஞரணியால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது.