திருச்சி:தேர்தலின்போது அள்ளிவிடும் வாக்குறுதிகள் காற்றிலே பறந்துகொண்டு தான் இருக்கின்றன. அதே நேரத்தில், ஏழைகளின் வாழ்வு இன்னமும் மேம்பட்டதாகத் தெரியவில்லை. கோடிகளில் புரளும் பணக்கார அரசியல்வாதிகள் கூட மக்களுக்கு உதவ சிறிதளவே முயல்கின்றனர்.
இத்தகைய சூழ்நிலைகளின் நடுவே வாழும் நம்மிடையே நாள் முழுதும் பெற்ற யாசகத்தை தனக்கென ஒதுக்காமல் ஒருவர் அரசிடம் கரோனா பொது நிவாரண நிதியாக வழங்கினார் எனில் நம்பமுடிகிறாதா? ஆம். தான் பெறும் யாசகங்களை அரசு பள்ளி மாணவர்களுக்கும், கரோனா காலத்தின் தொடக்கத்திலிருந்து அரசின் பொது நிவாரண நிதிக்கும் வழங்கியுள்ளார், பூல்பாண்டி என்ற யாசகர்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர், பூல்பாண்டி. யாசகரான இவர் தான் யாசகம் பெறும் பணத்தை அரசுக்கும், இன்னப் பிற நலத்திட்ட உதவிகளுக்கும் அளித்து உதவி செய்து வருகிறார். கடந்த 2010ஆம் ஆண்டு முதல் அரசு பள்ளிகளுக்கு, தான் யாசகமாக பெற்ற பணத்தை நன்கொடையாக செலுத்தி வருகிறார். கரோனா காலத்தில் அரசின் கரோனா நிவாரண நிதிக்கு பண உதவி செய்ய யாசகம் பெற்று தந்துள்ளார்.
ரூ.10 ஆயிரம் நிவாரண நிதி:இதன் தொடர்ச்சியாக அவ்வப்போது, யாசகம் பெற்ற பணத்தையும் அரசின் நிவாரண நிதிக்கு செலுத்தி வந்துள்ளார். அந்த வகையில் இன்று (பிப்.6) திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த பூல்பாண்டி, மாவட்ட ஆட்சியரை சந்தித்து ரூ.10 ஆயிரம் பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.