திருச்சி:முசிறி அருகே சூரம்பட்டி கிராமத்தில் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு என தனியாக கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த ஜூன் 5ஆம் தேதி அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காகவும், கோயிலுக்கு வரி கொடுக்கவும் மே மாதம் இதே சமுதாயத்தை சேர்ந்த பல்வேறு ஊர்களில் வசிக்கும் 5 வாலிபர்கள் முன்வந்துள்ளனர்.
ஆனால் கோயில் நிர்வாகம் ஐந்து வாலிபர்களும் வேறு சமுதாயத்தை சேர்ந்த பெண்களை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளதால் வரி வாங்க முடியாது என்றும் கோயில் விழாவில் சேர்த்துக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, காதல் திருமணம் செய்து கொண்ட 5 வாலிபர்களும் இது குறித்து முசிறி காவல் நிலையத்தில் மே 8ஆம் தேதி புகார் அளித்துள்ளனர்.
பின் முசிறி போலீசார் விசாரணை நடத்தி, முசிறி வட்டாட்சியர் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தைக்கு பரிந்துரை செய்து இருதரப்பினரையும் அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து, ஜூன் 2ம் தேதி முசிறி தாசில்தார் பாத்திமா சகாயராஜ் தலைமையில் இரு தரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அப்போது கோயில் கும்பாபிஷேகத்தில் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் வழிபாடு செய்வதற்கு ஒப்புக் கொள்வதாகவும், பின்னர் நடைபெற உள்ள பூஜையில், உரிய சடங்குகளுக்கு பின்னர் அவர்களை சேர்த்துக் கொள்வதாகவும் கோயில் நிர்வாக தரப்பில் கூறியுள்ளனர். இதையடுத்து கும்பாபிஷேக விழாவில் காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர்கள் தங்களது மனைவி பிள்ளைகளுடன் சென்று கலந்து கொண்டனர்.
அதை தொடர்ந்து, அன்று (ஜூன் 5) மாலை தேங்காய் பழம் படைப்பதற்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர்களுக்கு அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, காதல் திருமணம் செய்த வாலிபர்கள் முசிறி காவல் நிலையத்தில் மீண்டும் வந்து ஜூன் 6ஆம் தேதி புகார் செய்தனர். புகாரின் பேரில் முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.