திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் ஊரடங்கு உத்தரவை சாதகமாகப் பயன்படுத்தி வெளிமாநில லாட்டரி விற்பனை சூடுபிடித்துள்ளதாக காவல் துறை துணைத் தலைவர் பாலகிருஷ்ணனுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து அவரது உத்தரவின்பேரில் புதுக்கோட்டையைச் சேர்ந்த தனிப்படையினர் மணப்பாறையில் ரகசியமாகத் தங்கி, ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் பெஸ்டோ நகர், விராலிமலை ரோடு, கோவில்பட்டி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை காவல் துறையினர் இன்று திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி, தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்திருந்த ஆறு பேரை, தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து பல லட்சம் மதிப்புள்ள வெளிமாநில லாட்டரி சீட்டுகள், ஆறு செல்போன்கள், நான்கு இருசக்கர வாகனங்கள், இருபதாயிரம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு, மணப்பாறை காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதையும் படிங்க :குளத்தில் இருந்து ஆண் சடலம் மீட்பு - காவல் துறையினர் விசாரணை!