திருச்சி:தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்று வரும் கரோனா பரிசோதனை பணிகளையும், விமான நிலையத்தில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், "ஒன்றிய அரசு அறிவிப்பதற்கு முன்பதாகவே தமிழ்நாடு அரசு பன்னாட்டு விமான நிலையங்களில் பயணிகளை சோதனை செய்ய ஆரம்பித்தனர். குறிப்பாக சீனா, ஹாங்காங், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளை தவிர்த்து, மற்ற நாடுகளில் இருந்து வரக்கூடியவர்களை ரேண்டம் முறையில் 2 சதவீதம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 24ஆம் தேதி முதல் பன்னாட்டு விமான நிலையங்களில் வெளிநாடுகளிலிருந்து வரும் விமான பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடைபெற்று வருகிறது. ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். ஜப்பான், சீனா, ஹாங்காங், தென்கொரியா போன்ற நாடுகளில் இருந்து வரக்கூடியவர்கள் 100% பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்.
தற்போது 4 பன்னாட்டு விமான நிலையங்களிலும் 22,969 வந்துள்ளனர். அதில் 533 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். நேற்று சீனாவில் இருந்து தென்கொரியா, இலங்கை வழியாக மதுரைக்கு வந்த பயணிக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருடைய ரத்த மாதிரிகள் இன்று சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அது எந்த வகையைச் சேர்ந்தது என்பது குறித்து ஆராயப்படுகிறது. அதில் பி.எப்.7 தான் பிரபல நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளில் கம்போடியாவில் இருந்து ஒருவரும், துபாயில் இருந்து வந்த ஒருவருக்கும் கரோனா நோய்த்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஒருவர் ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்தவர், மற்றொருவர் சென்னை பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர், இருவரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.