திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே லலிதா ஜுவல்லரியில் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி பதின்மூன்று கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக திருவள்ளூரில் மணிகண்டன், கனகவல்லி ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். மேலும் வாகன சோதனையின்போது தப்பி ஓடிய கனகவல்லியின் மகன் சுரேஷ் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்நிலையில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த முருகன் பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சரணடைந்தார். இதனை அடுத்து பெங்களூரு பொம்மனஹள்ளி போலீசார் மேற்கொண்ட விசாரணையில் திருடப்பட்ட நகைகளை பதுக்கி வைத்திருப்பதாக முருகன் தெரிவித்தார். இதையடுத்து, இரண்டு வாகனங்களில் குற்றவாளி முருகனுடன் சென்ற காவல்துறையினர், திருச்சி திருவெறும்பூர் கல்லணை பகுதிக்கு அருகே உள்ள வனப்பகுதியில் மண்ணில் புதைத்து வைத்திருந்த 11.5 கிலோகிராம் தங்க நகைகளைத் தோண்டி எடுத்தனர்.
பின்பு திருவெறும்பூரில் முருகன் தங்கியிருந்த வீடு பூட்டப்பட்டு இருந்ததால் முருகனை அழைத்துக்கொண்டு, பெரம்பலூர் வழியாக பெங்களூரு சென்று கொண்டிருந்தனர். இத்தகவலை அறிந்த திருச்சி துணை ஆணையர் மயில்வாகனன் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபனிடம் தகவல் அளித்தார். பின்னர் அதன் பேரில் பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் கிருஷ்ணாபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.