ஊரடங்கின் காரணமாக பொது போக்குவரத்து முடக்கப்பட்டதால், மகாராஷ்டிரா மாநிலம் சோழாப்பூர் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றி வந்த தமிழ்நாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் 962 பேர், தங்களது சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் வெளி மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக மத்திய, மாநில அரசால் சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி, மகாராஷ்டிரா மாநிலம் பந்தர்பூர் ரயில் நிலையத்திலிருந்து 962 தொழிலாளர்களுடன் நேற்று புறப்பட்ட இந்த சிறப்பு ரயில் திருச்சி ரயில்வே நிலையத்தை இன்று மதியம் வந்தடைந்தது. அதில் வந்த இளைஞர்கள் விசில் அடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அந்த ரயிலில் பயணித்துவந்த 962 பேரும் 30 அரசு பேருந்துகள் மூலம் அவரவர் மாவட்டத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அனைவரும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் பொறுப்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படுவர்.