திருச்சி ஆஞ்சநேயர் கோயிலில் கோலாகலம் - 1,00,008 வடைமாலை அலங்காரம் திருச்சி:அன்புக்கும் தொண்டுக்கும் வீரத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கும், ஶ்ரீராம பக்தன் அனுமன் முக்கிய இந்து கடவுளாகப் போற்றப்படுகிறார். அனுமன் மார்கழி மாதம் அமாவாசையன்று மூல நட்சத்திரத்தில் அவதரித்த தினமான இன்று அனுமன் ஜெயந்தி விழா நாடெங்கிலும் உள்ள ஆலயங்களில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அனுமன் ஜெயந்தியான இன்று விரதமிருந்து ராமநாமம் ஜெபித்து அனுமனை வழிபடுபவர்களுக்கு சஞ்சலங்கள் விலகி, சகல செல்வங்களும் பொங்கி பெருகும் என்பதும், சனிப்பெயர்ச்சி நடப்பவர்கள் அனுமனை வணங்கி வந்தால் சகல சங்கடங்களும் நீங்கும் என்பதும் ஐதீகமாக உள்ளது.
அனுமன் ஜெயந்தியையொட்டி, திருச்சியில் பிரசித்திபெற்ற கல்லுக்குழி ஆஞ்சநேயர் ஆலயத்தில் மூலவர் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்பு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார். உற்சவர் ஆஞ்சநேயருக்கு பல்வேறு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
பின்னர் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடை மாலை மற்றும் 10,008 ஜாங்கிரி மாலை சார்த்தப்பட்டு சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க லட்சார்த்தனையும், ராமபாராயணமும் நடைபெற்றது. இதில் பெருந்திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அனுமனை தரிசித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:அனுமன் ஜெயந்தி: புகழ்பெற்ற அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு