தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசியல் களத்தில் மற்றொரு திமுக வாரிசு!

திருச்சி: திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் மகன் அருண் நேரு நேரடி அரசியலில் இறங்கத் தொடங்கியதால், நேருவின் ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

நேரு
நேரு

By

Published : Feb 12, 2020, 7:21 PM IST

திருச்சி மாவட்ட, திமுக செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் கே.என். நேரு சமீபத்தில் திமுக முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து திருச்சி மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு அன்பில் மகேஷ் பொய்யாமொழி, காடுவெட்டி தியாகராஜன், வைரமணி ஆகியோர் மாவட்டச் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டனர். இந்த பதவி உயர்வு காரணமாக மாவட்ட அரசியலிலிருந்து கே.என். நேரு மாநில அரசியலுக்கு நகரத் தொடங்கிவிட்டார்.

இதைத்தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில், அவரது சார்பில் அவரது மகன் காலூன்றத் தொடங்கியுள்ளார். முன்னதாக கே.என். நேருவின் தம்பி, மறைந்த ராமஜெயம் நேருவின் அரசியல் வாரிசாக கருதப்பட்டார். ஆனால், அவர் திமுகவில் நன்கு வளர்வதற்குள் அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத நிலை உள்ளது. தம்பியின் எதிர்பாராத இழப்பு காரணமாக வாரிசுகளை அரசியலுக்கு இறக்க கே.என். நேரு தயக்கம் காட்டி வந்தார்.

இந்நிலையில் மாவட்ட அரசியலில் காலூன்ற, தனது மகன் அருண் நேருவை திடீரென அவர் களமிறக்கியுள்ளார். திருச்சி பாரத மிகுமின் நிறுவனம் தொமுச நிர்வாகி இல்லத் திருமண விழாவில், நேருவின் மகன் அருண் நேரு கலந்து கொண்டார். அவருக்கு கட்சியினர் பேனர் வைத்தும், விளம்பரங்களை வெளியிட்டும் வரவேற்பு அளித்திருந்தனர். இதற்கு முன்பு அருண் நேருவுக்கு இதுபோன்றதொரு வரவேற்பை யாரும் அளித்தது கிடையாது.

இதன்மூலம் அருண் நேரு நேரடியாக அரசியல் களத்தில் குதித்து உள்ளதாகவே திமுகவினர் கருதுகின்றனர். கே.என். நேருவின் வாரிசு என்பதால், அவரது ஆதரவாளர்களும் அருண் நேருவின் அரசியல் பயணத்தை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். அருண் நேருவுக்கு திமுக இளைஞர் அணி இணைச் செயலாளர் பதவியும் கிடைக்குமென்று பரவலாகப் பேசப்படுகிறது.

திமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் ஐ. பெரியசாமி, துரைமுருகன், டி.ஆர். பாலு, பொன்முடி போன்றவர்கள் வரிசையில் நேருவும் தனது வாரிசை அரசியல் பயணத்திற்கு இறக்கியுள்ளார்.

இதையும் படிங்க:

நிர்பயா வழக்கு: குற்றவாளிக்கு சட்ட உதவி வழங்க முன்வந்த நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details