திமுக முதன்மை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று (ஜூலை 1) நேரில் சென்று கோரிக்கை மனு ஒன்றினை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கே.என்.நேரு கூறியதாவது: திருச்சி மாவட்டத்தில் எவ்வளவு எண்ணிக்கையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது? சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை கேட்குமாறு திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
திருச்சி மாவட்டத்தில் அதிகளவு தொற்று பரவி வருவதால் இது குறித்து விசாரணை நடத்த அறிவுறுத்தியுள்ளார். அதனடிப்படையில், இன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆட்சியரிடம் விவரங்களை கேட்டறிந்தேன். திருச்சி மாவட்டத்தில் ஆட்சியர் மற்றும் அலுவலர்கள் எடுத்துவரும் தடுப்பு நடவடிக்கைகள் திருப்தி அளிக்கவில்லை. சரியான முறையில் இருந்திருந்தால் தொற்று அதிகரித்திருக்காது. தற்போது ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் கரோனா சிறப்பு சிகிச்சை வார்டாக மாற்றியுள்ளனர். அதேபோல் தேவைப்பட்டால் திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க வழங்கப்படும்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் பெற்றுக் கொண்டு தான் தூத்துக்குடி சென்றார். இது அரசாங்கத்திற்கும் தெரியும். ஆனால் அரசியலுக்காக அதை விமர்சனம் செய்கின்றனர். தூத்துக்குடி சாத்தான்குளத்தில் மாஜிஸ்ட்ரேட் மிரட்டப்பட்டு இருக்கிறார். ஒரு காவலர் சுவர் ஏறி குதித்து ஓடியிருக்கிறார். லத்தியில் ரத்தக்கறை படிந்துள்ளது. இதில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நாங்கள் எது செய்தாலும் கரோனாவை வைத்து அரசியல் செய்வதாக கூறுகிறார்கள்” என்றார்.