திருச்சி கேகே நகர் அருகே உள்ள கிருஷ்ணமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் ராஜா என்கிற அழகர்சாமி (வயது 45). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில வணிகர் அணி துணைச் செயலாளராக இருந்து வருகிறார். மேலும் ராஜாவும் அவரது தம்பி ரமேஷ்குமாரும் இணைந்து ரியல் எஸ்டேட், பட்டாசு விற்பனை போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 8.30 மணி அளவில் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள அவரது அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்த போது, 7 பேர் கொண்ட மர்ம கும்பல் 2 கார்களில் வந்து வழிமறித்து கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களைக் காட்டி மிரட்டி ராஜாவை அவரது காருடன் கடத்திச் சென்றுள்ளனர்.
கடத்தி சென்றவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே வைத்து மிரட்டி, அவரிடமிருந்த ரூ.4 லட்சம் பணம் மற்றும் நகைகளை பறித்துள்ளனர். மேலும் ரூ.40 லட்சம் கொடுத்தால்தான் விடுவிப்போம் என்று கூறி மிரட்டியுள்ளனர். அப்போது அவர்கள் கேட்ட தொகையை தருவதாக அழகர்சாமி ஒத்துக்கொண்டார். இதையடுத்து அந்த கும்பல் ராஜாவை அங்கேயே காரில் இருந்து இறக்கிவிட்டு விட்டு தப்பிச் சென்றது.