தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 26, 2020, 5:32 AM IST

Updated : Jul 26, 2020, 11:44 AM IST

ETV Bharat / state

கார்கிலில் விதைக்கப்பட்ட தமிழனின் வீரம்!

திருச்சி: கார்கில் போரில், பாகிஸ்தான் ராணுவத்திடம் போரிட்டு தன் இன்னுயிரை இழந்த மேஜர் சரவணனை, கார்கில் வெற்றி தினமான இன்று ( ஜூலை 26) நினைவு கூர்கிறது ஈடிவி பாரத்...

மேஜர் சரவணன்
மேஜர் சரவணன்

1999ஆம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தான் ராணுவம், இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி, இந்தியாவிற்குள் முகாமிட முயன்றது. அவர்களைத் தடுத்து நிறுத்த, காஷ்மீரின் கார்கில் அருகில் இந்திய ராணுவம் தொடர்ந்து போரிட்டது. இதன் காரணமாக, பாகிஸ்தானியர்களிடமிருந்து, இந்தியப் பகுதிகள் மீட்கப்பட்டன. அவ்வாறு அந்தப்பகுதிகள் மீட்கப்பட்ட ஜூலை 26ஆம் நாளையே, நாம் கார்கில் வெற்றி தினமாகக் கொண்டாடுகிறோம்.

இந்த கார்கில் போரில் பல இந்திய வீரர்கள் தங்கள் இன்னுயிரை இழந்து, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர். அவ்வாறு 1999ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி நடந்த கார்கில் போரில், திருச்சியைச் சேர்ந்த மேஜர் சரவணன் வீர மரணமடைந்தார். பிகாரின் படைப்பிரிவில் பணிபுரிந்த மேஜர் சரவணனுக்கு கார்கில் அருகே உள்ள பதாலிக் பகுதியில் தாக்குதல் நடத்த உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். தனது குழுவினருடன் மே 29ஆம் தேதியன்று, அதிகாலை 4 மணிக்கு ஜுபர் மலைப்பகுதியில் உள்ள எதிரிகள் பதுங்கியிருந்த பதுங்கு குழியை நோக்கி, ராக்கெட் லாஞ்சர் மூலம் சரவணன் தாக்குதல் நடத்தினார்.

கார்கில் வெற்றி தினமும்... தமிழனின் உயிர்த்தியாகமும்...
இதில் எதிர்தரப்பில் 2 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து எதிரிகள் பதுங்கியிருந்த பகுதியை நோக்கி, தாக்குதல் நடத்திக் கொண்டே முன்னேறினார். எதிரிகளும் எதிர்த்தாக்குதல் நடத்தினர். அப்போது சரவணனின் அருகில் வெடிகுண்டு வெடித்ததில், அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அவரது உடலில் துப்பாக்கி குண்டும் பாய்ந்தது. அதையும் பொருட்படுத்தாது ராக்கெட் லாஞ்சர் கொண்டு தொடர்ந்து எதிரிகளைத் தாக்கினார்.
எதிரிகளைத் திணறடித்த சரவணன் தொடர்ந்து பாகிஸ்தான் பிடியில் இருந்த பகுதிக்குள் நுழைந்தார். அப்போது எதிரிகள் நடத்திய தாக்குதலில், சரவணன் வீரமரணம் அடைந்தார்.
அவரது வீர தீர செயல்களுக்காக இந்திய அரசின் பட்டாலிக் நாயகன், வீர் சக்ரா விருதுகள் அவருக்கு மரணத்திற்குப் பிறகு வழங்கப்பட்டன. வீர மரணமடைந்த சரவணனின் குடும்பத்தினர் மேஜர் சரவணன் நினைவு அறக்கட்டளையைத் தொடங்கி நடத்தி வருகின்றனர். மேஜர் சரவணனின் தந்தையும் ராணுவத்தில் மருத்துவராகப் பணிபுரிந்தவர் ஆவார்.
மேஜர் சரவணன், அவரது தந்தை
1972ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி பிறந்த மேஜர் சரவணன், திருச்சி கேம்பியன் பள்ளியில் பயின்று, ஜோசப் கல்லூரியில் பட்டம் பெற்றவர். கல்லூரிப் பருவத்திலேயே என்சிசி பிரிவில் இணைந்து சான்றிதழ் பெற்ற அவருக்கு, அவர் வாழ்ந்த திருச்சியிலேயே வெஸ்ட்ரி பள்ளி அருகே 2007ஆம் ஆண்டு நினைவகம் அமைக்கப்பட்டது. இதில் நான்கு தூண்கள் அமைக்கப்பட்டு, அதில் அசோகச் சின்னம், ராணுவப் படை முத்திரை, சரவணன் பணிபுரிந்த பிகார் படைப்பிரிவு முத்திரை ஆகியவை இடம் பெற்றுள்ளன.
மேஜர் சரவணன்
ஆண்டுதோறும் கார்கில் வெற்றி தினமான ஜூலை 26ஆம் தேதி, ராணுவத்தினர், அவரது குடும்பத்தினர் மற்றும் பள்ளி மாணவ - மாணவிகள் சரவணனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாமும் இந்த வீரத்தமிழனை கார்கில் வெற்றிநாளில் நினைவுகூர்வோம்.
Last Updated : Jul 26, 2020, 11:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details