திருச்சி: கே.கே.நகரில் உள்ள பெரியார் மணியம்மை நூற்றாண்டு கல்வி வளாகம் மற்றும் நாகம்மை ஆசிரியை பயிற்சி நிறுவனத்தில் பொங்கல் விழா இன்று (ஜன.12) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் விழா கொண்டாட்டத்தில் திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி பங்கேற்றார். பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்ட பொங்கலை கி வீரமணி மாணவ மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கி.வீரமணி கூறுகையில், 'ராமர் கோயில் திறப்பு விழாவில் இந்திய (INDIA Alliance) கூட்டணியைச் சேர்ந்த பெரும்பாலான கட்சிகள் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்திருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். 'பக்தி' என்பது அவரவர் தனிச்சொத்து; ஆனால், பாஜகவினர் அதை அரசியலுக்குப் பயன்படுத்துகிறார்கள். கட்டி முடியாத கோயிலைப் பிரதிஷ்டை செய்யக்கூடாது என சங்கராச்சாரியார்கள் கூறியுள்ளனர்.
இந்து மத விவகாரங்கள் தொடர்பாக சங்கராச்சாரியார்கள் தான் கருத்துக் கூற முடியுமே தவிர, பாஜகவினர் கூற முடியாது' என்றார். மேலும், 'பாஜகவை எதிர்ப்பவர்கள் சனாதன விரோதிகள், இந்து மத விரோதிகள் எனக்கூறக் கூறும் பாஜகவினர் தற்பொழுது, சங்கராச்சாரியார்களைப் பார்த்து அவ்வாறு கூறுவார்களா? முடிந்தால் பாஜகவினர் அதைக் கூறட்டும்; இல்லையென்றால், அவ்வாறு மற்றவர்களைக் கூறுவதை நிறுத்த வேண்டும்.