திருப்பூர் மாவட்டம் , தாராபுரம் பெரிய கடை வீதியை சேர்ந்த பலராமன் மகன் ஹரி. இவர் அப்பகுதியில் எஸ்விஆர் நகை கடை, பைனான்ஸ், தானிய மண்டி ஆகியவற்றை நடத்திவருகிறார். இவரும் இவரது குடும்பத்தினர் 5 பேரும் திடீரென தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓராண்டிற்கு முன்பு நடிகை ஓவியா திறந்து வைத்த இந்த நகைக்கடையில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்ட நிலையில், அதைச் சமாளிக்க ஹரி பல்வேறு இடங்களில் கடன் வாங்கினார். ஆனால் கடனை அடைக்க முடியவில்லை.
கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்து உள்ளனர். தாராபுரம் காவல் நிலையத்தில் பலராமன், ஹரி மீது மோசடி புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. காவல் துறை விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக பலராமன், தனது குடும்பத்தினருடன் திருச்சி மாவட்டம் லால்குடி, சந்தைப் பேட்டை பகுதியில் உள்ள தனது மருமகள் வீட்டிற்கு வந்துள்ளனர். ஆனால் அங்கும் பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்த அவர்கள் ஊருக்கு புறப்படுவதாக கூறி அங்கிருந்து வெளியேறினர்.
அதன் பின்னர் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே துடையூரில் உள்ள ஹோட்டலில் அறை எடுத்து அதில் பலராமன் ( 75 ), இவரது மனைவி புஷ்பா, மகன் ஹரி ( 38 ), இவரின் மனைவி திவ்யா, இவர்களது மகள் 8 வயதான அசோக்ராதா ஆகியோர் தங்கினர். வேறொரு அறையில் கார் ஓட்டுநர் அய்யப்பன் தங்கியுள்ளார்.