உறையூர் பகுதியில் உள்ள பள்ளியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் படம் பொறித்து விநியோகம் செய்யப்பட்ட பைகள் மற்றும் பென்சில்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
திருச்சி உறையூர் குறத்தெருவில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி நேற்று காலை திறக்கப்பட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த பள்ளி மாணவர்களுக்கான புத்தக பைகள் ஆட்டோக்களில் எடுத்துச்செல்லப்பட்டன. அந்தப் புத்தகப்பைகளில் ஜாமண்டரி பாக்ஸ், கலர் பென்சில் பாக்ஸ் உடன் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படங்களும் பொறிக்கப்பட்டிருந்தன.
தேர்தல் விதி மீறி பள்ளி மாணவர்களுக்கு பை வினியோகம் இதனைக் கேள்விப்பட்ட திருச்சி திமுக மாநகர செயலாளர் அன்பழகன், பகுதி செயலாளர் கண்ணன், மாவட்ட துணை செயலாளர் முத்து செல்வம் உள்ளிட்ட திமுகவினர் அந்தப் பள்ளிக்கு சென்று இது குறித்து கேட்டனர். அப்போது அங்கிருந்த பள்ளி ஊழியர், இங்கு வாக்குசாவடி அமைய உள்ளதால், இங்கிருந்த புத்தக பைகளை அகற்ற உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து, இதுவரை 15 பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இது தொடர்பாக தேர்தல் கமிஷனில் திமுகவினர் புகார் தொிவித்தனர். இந்தப் புகாரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், முதலமைச்சர் படம் அச்சிடப்பட்ட புத்தக பைகள் தற்போது விநியோகிக்கப்படுவது விதிமுறைகளுக்கு முரணானது, எனவே 15 பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட புத்தக பைகளை திரும்ப பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தேர்தல் கண்காணிப்பாளர் ஜோசப் தலையில் காவல்துறையினர் பள்ளிக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். தற்போது விநியோகம் செய்யப்பட்ட பொருள்கள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டு நடுநிலைப் பள்ளியில் உள்ள தனி அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன.