திருச்சி:ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் உயர்மட்டக்குழு கூட்டம் திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சங்கர், குமார் மற்றும் இளங்கோ ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்புடன் இணைந்த பல்வேறு அமைப்பைச் சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்த கூட்டத்தின் நிறைவாக, செய்தியாளர்களைக் கூட்டாகச் சந்தித்துப் பேட்டியளித்த ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களின் ஒருவரான சங்கர் கூறுகையில், சென்னையில் ஆசிரியர், அரசு ஊழியர் போராட்டத்தின் போது மிரட்டி, வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டமைக்காக தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஜாக்டோ-ஜியோ பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தது. பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்தவொரு கோரிக்கைகளைத் தமிழக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து, இக்கூட்டத்தில் அக்டோபர் 28 ஆம் தேதி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நவம்பர் 1ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும், நவம்பர் 15ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை பிரச்சார இயக்கமும், நவம்பர் 25ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.