திருச்சி: தேசிய தலித் கிறிஸ்தவ பேரவையின் தென் மண்டலச் செயலாளர் வின்சென்ட் மற்றும் தமிழக மக்கள் நலக் கட்சியின் மாநிலப் பொருளாளர் தாஸ் பிரகாஷ் ஆகியோர் ஒருங்கிணைந்து இன்று திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மக்கள் நலக் கட்சியின் மாநிலப் பொருளாளர் தாஸ் பிரகாஷ் “திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோட்டைப்பாளையம் கிராமத்தில் புனித மகதலேனா மரியாள் பங்கு ஆலயம் உள்ளது.
இந்த பங்கு ஆலயத்தில் தலித் கிறிஸ்தவர்களுக்கு எதிராகத் தீண்டாமை பாகுபாடு காட்டும் நிலை ஏற்பட்டு உள்ளது. நீண்ட காலமாகத் தொடர்ந்து இந்த சாதிய பாகுபாடு பிரச்சினை துறையூர் கோட்டைப்பாளையம் கிராமத்தில் ஏற்பட்டு உள்ளது. கும்பகோணம் கத்தோலிக்க மறை மாவட்டத்திற்கு உட்பட்ட கோட்டைப்பாளையம் பங்கு தந்தை அகஸ்டின் மற்றும் அங்கு உள்ள ஆதிக்கச் சாதி கிறிஸ்தவர்கள் இந்த எதேச்சதிகாரப் போக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாகக் கோயில் திருவிழாவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களிடம் வரி வசூல் செய்யாமலும், பங்கு பேரவையில் தலித் கிறிஸ்தவர்களுக்கு இடம் தர வேண்டும் என்ற காரணத்தால் பங்கு பேரவை அமைக்காமல் தலித் கிறிஸ்தவர்களைப் புறக்கணித்து வருகின்றனர். இது மட்டுமில்லாமல் ஆலயத்தில் நடைபெறும் திருவிழா நேரங்களில் தலித் தெருவுக்குத் தேர் கொண்டு செல்லாமலும், சுருவம் தூக்கி வைக்க அனுமதிக்காமலும் தேவாலயம் திருவிழாக்களில் பங்கேற்கக் கூடாது என பல்வேறு காரணங்களைச் சொல்லிப் புறக்கணித்து வருகின்றனர்” என்று கூறி உள்ளார்.