திருச்சி: இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியில் நிலாவும், உலக அமைதியும் என்ற தலைப்பில் மாணவிகள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "சந்திரயான்-3 விண்கலம் நிலவை நெருங்கி உள்ளது அதே சமயம் நிலாவும் உலக அமைதியும் என்ற தலைப்பில் மாணவர்களிடம் பேச உள்ளேன். 1960களில் அமெரிக்க - ரஷ்யா இடையே பனிப்போர் உச்சத்தில் இருந்தது.
தற்போது நிலவை நோக்கிய பயணம் என்பதற்கு விதை போட்டது சந்திரயான்-1. நிலவில் நீரைக் கண்டு பிடித்தது எனவே மீண்டும் அனைவரும் நிலவைத் தாண்டி நிலவின் தென் துருவம் நோக்கிய விண்வெளிப் பயணத்தில் வளைகுடா நாடுகள், ரஷ்ய, அமெரிக்கா, ஜப்பான், கொரியா போன்ற உலக நாடுகள் வர உள்ளன.
இந்த பயணம், உலக நாடுகள் அமைதி மற்றும் முன்னேற்றம் குறித்ததாக இருக்கும். வெப்ப மண்டலங்களான வளைகுடா நாடுகள் எண்ணெய் வளத்தால் மாற்றம் அடைந்து, எப்படி மனிதர்கள் வாழ்வதற்கான மாற்றம் உருவானதோ அதேபோல நிலவிலும் அந்த மாற்றம் நிகழலாம்.
நிலவைச் சந்திரயான் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நிலவைத் தாண்டி, தென் துருவத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். பல நாடுகளும் இதற்கான பயணத்தைத் தொடங்கியுள்ளனர். நிலவில் நீர் இருப்பதற்கான ஆதாரம் மற்றும் பிற மூலப் பொருட்களின் இருப்பு குறித்த நோக்கத்தில் இந்த பயணம் உள்ளது.
அறிவியலில் அடுத்த கட்டமாகப் போவதற்கும், மனிதன் மீண்டும் நிலாவிற்குச் செல்லும் வகையில் இம்முயற்சி அமையும். நிலாவை, விண்வெளியில் பிரிக்கப்பட்ட இன்னொரு கண்டமாக நான் பார்க்கிறேன்.