தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பில் மாற்றம் உள்ளதா? - அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் - திருச்சி செய்திகள்

வருகிற ஜூன்‌ மாதம் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திட்டமிட்டவாறு திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 24, 2023, 8:22 AM IST

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பில் மாற்றம் உள்ளதா? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடுத்த முக்கிய அப்டேட்

திருச்சி: மாமன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1348வது சதயவிழா நேற்று (மே 23) கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு திருச்சி பாரதிதாசன் சாலை ஒத்தக்கடை‌ பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பள்ளிகல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “வருகிற ஜூன்‌ மாதம் 1 ஆம் தேதி, 6 முதல் 12 ம் வகுப்பு வரையிலும், அதே போன்று ஜூன்‌ மாதம் 5ஆம் தேதி 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலும் பள்ளிகள் திட்டமிட்டவாறு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளித் திறப்பில் மாற்றம் இருந்தால் தமிழ்நாடு முதலமைச்சர் அதனை அறிவிப்பார்.

தனியார் பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி அறிவுறுத்தி உள்ளோம். முறையான சோதனைகளுக்குப் பிறகே பள்ளிப் பேருந்துகள் இயக்க அனுமதி‌ வழங்கப்படும். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கட்டி முடிக்கப்பட்டுள்ள பெரும்பிடுகு முத்தரையர் மணி மண்டபத்தை திறந்து வைக்க பல்வேறு தரப்பிலும் கோரிக்கை வந்துள்ளது.

இதனை தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் மணி மண்டபத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்குவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “பள்ளி மாணவர்களுக்கு வழக்கம் போல சைக்கிள், லேப்டாப் ஆகியவை இந்த ஆண்டும் வழங்கப்படும்.

பள்ளிகள் திறக்கப்படும் அன்றே மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்படும். அதற்கு தேவையான பாட புத்தகங்கள் தற்போது கையிருப்பில் உள்ளது. பழுதடைந்த அரசு கட்டடங்களைப் புதுப்பிக்கும் திட்டத்தினை‌ கடந்த பிப்ரவரி மாதம் 1‌ஆம் தேதி வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில்‌ முதற்கட்டமாக 185 ஊராட்சிகளில் உள்ள தொடக்கப்பள்ளி கட்டடங்கள் புதுப்பிக்கப்படும்.

உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி கட்டடங்கள் கட்டுவதற்கு நபார்டு வங்கியின் உதவி தேவைப்படுகிறது. நபார்டு வங்கி ஒட்டு‌ மொத்த அமைச்சர்களின் துறைகளுக்கும் நிதி உதவி வழங்குகிறது. அந்த வகையில் பள்ளிக்கல்வித் துறைக்கும் நிதி உதவி வழங்கப்படும். விரைவில் அந்த நிதியைப் பெற்று ஒரு மாத காலத்திற்குள் பழுது அடைந்த பள்ளிகள் புதுப்பிக்கும் பணி தொடங்கும்” என தெரிவித்தார்.

முன்னதாக கோடை வெயிலின் தாக்கத்தால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படும் என தகவல்கள் வெளியான நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் அதனை மறுக்கும் விதமாக விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படிங்க:பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும்: அரசுக்கு ராமதாசு வலியுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details