திருச்சி: ஐஆர்சிடிசி (IRCTC) பாரத் கெளரவ் சிறப்பு ரயில் சுற்றுலா குறித்து ஐஆர்சிடிசி பொது மேலாளர் ரவிகுமார், திருச்சி பத்திரிகையாளர் மன்றத்தில் வைத்து இன்று (ஏப்ரல் 11) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய ரவிகுமார், “இந்தியன் ரயில்வேயின் சுற்றுலாப் பிரிவான ஐஆர்சிடிசி, சுற்றுலாப் பயணிகளுக்காக பிரத்யேக பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ரயிலில் 4 குளிர் சாதனப் பெட்டிகள், 7 படுக்கை பெட்டிகள் (Sleeper Coaches), 1 பேண்ட்ரி கார் மற்றும் 2 பவர் கார்கள் என மொத்தம் 14 பெட்டிகள் உள்ளன.
பாரத் கெளரவ் சுற்றுலா ரயிலின் முதல் ஓட்டத்தில், ஐஆர்சிடிசி தென் மண்டலம் அல்லது சென்னை சார்பில் ‘புண்ணிய தீர்த்த யாத்திரை’ என்ற பெயரில் சுற்றுப் பயணம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. மேலும் இந்தப் பயணம் சுற்றுலா செல்லும் மக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இந்த ரயிலில் மொத்தம் 750 பேர் பயணம் செய்யலாம். இதில் இதுவரை 500 பேர் பதிவு செய்துள்ளனர். எனவே 250 இடம் காலியாக உள்ளது. இந்த சுற்றுலாப் பயணம் வருகிற மே 4ஆம் தேதி தொடங்குகிறது.
இதில் மொத்தம் 11 நாட்கள் (12 இரவுகள்) பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தப் பயணத்தில் பூரி - கோனார்க் - கொல்கத்தா - சுயா - வாரணாசி - அயோத்தி - அலகாபாத் ஆகிய இடங்களைப் பார்க்கலாம். இந்தப் யணத்திற்கு கட்டணமாக படுக்கை வசதிக்கு 20 ஆயிரத்து 367 ரூபாயும், மூன்றாம் வகுப்பு குளிர் சாதன வகுப்புக்கு 35 ஆயிரத்து 651 ரூபாய் என வசதிக்கேற்ப கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.