திருச்சியில் வருகின்ற 28ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு சர்வதேச நடனப்போட்டி நடைபெறுகிறது. இதுகுறித்து நாளதி டிரஸ்ட் நிறுவனத் தலைவர் சுப்ரியா ரவிக்குமார் திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, "திருச்சி பரதநாட்டிய கலைஞர்கள் குழுவான நாளதி டிரஸ்ட் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருச்சியில் பல கலாசார விழாக்களை நடத்திவருகிறது. அந்த வகையில், டிசம்பர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் சர்வதேச அளவிலான பரதநாட்டியம் மற்றும் இந்தியாவின் நாட்டுப்புற நடனப்போட்டிகளை திருச்சி, கூத்தூர் ஸ்ரீவிக்னேஷ் வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.
28ஆம் தேதி திருச்சியைச் சார்ந்த மாணவர்களுக்கு பரதநாட்டிய போட்டியும், சர்வதேச அளவில் நாட்டுப்புற நடனப்போட்டியும் நடைபெறவுள்ளது. 29ஆம் தேதி பரதநாட்டிய போட்டி நடைபெறுகிறது. இதில் இலங்கை, மும்பாய், ஐதராபாத், பெங்களூர், லக்னோ, டெல்லி, சட்டீஸ்கர், கேரளா மற்றும் தமிழ்நாட்டின் பல இடங்களிலிருந்தும் போட்டிகளில் கலந்து கொள்ள வருகின்றனர். 30ஆம்தேதி பரதம், குச்சிபுடி, கதக்களி, மோகினியாட்டம், போன்ற இந்தியாவின் சாஸ்திரிய கலைகளில் தேர்ச்சிபெற்ற பல நடனகலைஞர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தவுள்ளனர்.
திருச்சியில் மாபெரும் கலைகொண்டாட்டம் இதனையடுத்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகையும், சான்றிதழ்களும், கலைஞர்களுக்கு விருதுகளும் வழங்கப்படும். முக்கிய விருந்தினர்களாக , பரதநாட்டிய வித்தகர் கலைமாமணி நந்தினி ரமணி கலந்து கொள்கிறார். இந்தப் போட்டிகளில் 600 கலைஞர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 35 பள்ளிகள் பதிவு செய்துள்ளன இதில் 10 பள்ளிகளைச் சேர்ந்த அனைத்து மாணவ, மாணவிகளும் பங்கேற்கின்றனர்" என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆழிப்பேரலைத் தாக்கி, 15 ஆண்டுகள் கடந்தும் மேம்படாத மீனவர்களின் வாழ்நிலை!