திருச்சி: தற்போது திருச்சி மாநகர் முழுவதும் தேவையான அனைத்து இடங்களிலும் போக்குவரத்து சிக்னல்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் கட்டாயம் பணியில் ஈடுபட வேண்டிய நிலை உள்ளது. ஆகையால் இந்த பணியில் உள்ள போலீசாருக்கு, இயற்கை உபாதைகளுக்குச் செல்லவும், மழை நேரங்களில் ஒதுங்கவும் முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனா்.
இதனையறிந்த திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், தனியாா் நிறுவனங்களின் பங்களிப்புடன் நவீன வசதிகளுடன் கூடிய அறைகளுடனான போக்குவரத்து மையங்களை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுத்து வந்தார். இதன் முதற்கட்டமாக, காந்திச் சந்தை பகுதியில் அதிநவீன போக்குவரத்து காவல் கண்காணிப்பு கோபுரம் கட்டமைக்கப்பட்டுத் திறக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்: சுமார் 20 அடி உயரத்தில் இரும்புத் தூண்களைக் கொண்டு கட்டுமானம் அமைத்துள்ளனர். இதில், தரைப்பகுதியிலிருந்து 8 அடி உயரத்தில் கழிப்பறை, அதற்குமேல் 4 அடி உயரத்துக்கு தண்ணீா்தொட்டி, அதற்கு மேல் 8 அடி உயரத்துக்கு உள்ளே இருந்த படியே சாலையை கண்காணிக்கும் வகையில் 4 புறங்களிலும் குளிா்சாதன வசதியுடன் கூடிய அறை, அங்கு செல்வதற்குப் படிக்கட்டு ஆகியவற்றுடன் கட்டப்பட்டுள்ளது.
தற்போது தமிழ்நாட்டிலேயே முதல்முறையாகத் திருச்சியில் தான் இத்தகைய நவீன போக்குவரத்து காவல் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 12 சிக்னல்களிலும் கேமராக்களில் பதிவாகும் காட்சிகளைக் காவல் கோபுரத்தில் உள்ள அறையிலிருந்து அகண்ட திரையில் பாா்க்கும் வகையில் பிரமாண்ட திரை வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.