திருச்சி:மாங்கல்ய பலம் வேண்டியும் நல்ல கணவன் அமைய வேண்டியும் ஆலமரத்துக்கு கயிறு கட்டி வழிபாடு செய்த வட மாநில பெண்கள். திருச்சியில் பொன்மலையில் வட மாநில பெண்கள் மாங்கல்ய பலம் வேண்டியும், நல்ல கணவன் அமைய வேண்டியும் வட சாவித்திரி விரதமிருந்து ஆலமரத்துக்கு கயிறு கட்டி வழிபட்ட பெண்கள்.
இல்லத்தரசிகள் பெரும்பாலும் விரதம் இருப்பது குடும்ப நன்மைக்காகவும், கணவன் மற்றும் பிள்ளைகள் ஆயுள் ஆரோக்கியத்திற்காக மட்டும் தான். வட சாவித்திரி பூஜை என்பது இந்தியாவில் பரவலாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும்.
சாவித்திரியின் மன உறுதியையும், தன் கணவனை உயிர்ப்பிக்க வேண்டும் என்ற பக்தியையும் போற்றும் வகையில் இந்த பூஜை வழக்கமாக நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக இந்த பூஜையில் பங்கேற்கின்றனர்.
குறிப்பாக வட மாநிலங்களில் இந்த விழாவானது வெகு விமர்சையாக சிறப்புடன் நடைபெற்று வருகிறது. திருமணம் ஆகாத பெண்களுக்கு இனிய கணவன் அமையவும், திருமணம் ஆன பெண்களுக்கு மாங்கல்ய பலம் பெருகவும் கன்னி பெண்களும் சுமங்கலி பெண்களும் ஆல மர விழுதுகளில் பூஜை செய்து அனுஷ்டிக்கும் இந்த நிகழ்வு தமிழக பகுதிகள் காரடையான் நோன்பு என கடைபிடிக்கப்படுகிறது.
கணவரின் ஆரோக்கியமும் ஆயுளும் சிறக்க வேண்டும் எனும் பிரார்த்தனையுடன் சுமங்கலிப்பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். கன்னிப்பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து வழிபடுவதால் விரைவில் கல்யாண வரம் கைகூடும் என்றும் மனதுக்கு பிடித்தமான கணவர் கிடைப்பார் என்பது நம்பிக்கை. வட இந்தியாவில் பெண்கள் விரதம் இருந்து ஆலமரப் பூக்களை சாப்பிடுவார்கள்.