ரயில் வழித்தடங்களில் உள்ள ரயில்வே லெவல் கிராசிங்குகளை தவிர்ப்பதற்காக மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் போன்றவை அமைக்கப்படுகின்றன. குறிப்பாக ஆளில்லாத லெவல் கிராசிங்கை ஒழிக்கும் நடவடிக்கையாக சுரங்கப் பாதைகள் ரயில் தண்டவாளங்களுக்கு அடியில் கட்டப்படுகின்றன.
அந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு முதலியார் சத்திரம் கெம்ஸ்டவுன் சாலையில் இருந்து மேலப்புதூரை அடையும் வகையில் ரயில் தண்டவாளத்துக்கு அடியில் சுரங்கப்பாதை கட்டப்பட்டது. இந்த சுரங்கப் பாதையில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார், பாதசாரிகள் கடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டது. இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பொதுவாக இதுபோன்ற சுரங்கப் பாதைகளின் மையப்பகுதியில் மழைநீர் தேங்கிக் கொள்வது வழக்கமான விஷயமாகும். பெரிய அளவிலான சுரங்கப் பாதையில் இவ்வாறு தேங்கும் மழைநீரை வெளியேற்றுவதற்கு மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும்.
இதேபோன்றுதான் மேலப்புதூர்- வேர்ஹவுஸ் இடையிலான பெரிய சுரங்கப் பாதையில் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த சிறிய அளவிலான சுரங்கப் பாதையில் மோட்டார் பொருத்தப்படவில்லை. இதனால் சிறிய மழை பெய்தாலே சுரங்கப் பாதையின் மையப்பகுதியில் ஒரு அடிக்கு மேல் மழை நீர் தேங்கி விடுகிறது. இதனால் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் போன்றவை மழைநீரில் நீந்தி செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.