கரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே உலுக்கி வருகிறது. இந்தியாவிலும் இதன் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதன் ஒரு கட்டமாக ஏப்ரல் 14ஆம் தேதி வரையிலான 21 நாள் ஊரடங்கு தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் நாட்டின் தலைநகரில் நடைபெற்ற சமய மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தமிழ்நாட்டிலிருந்து இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதனடிப்படையில் திருச்சியிலும் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு அழைக்கப்பட்டனர்.
இந்த வகையில் மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியவர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக வந்தனர். அவர்களது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் முடிவுகள் வெளியானது. இந்த வகையில் நேற்று வரை 39 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் 39 பேரும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பிலும், தொடர் சிகிச்சையிலும் வைக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து இவர்களது வீடு அமைந்துள்ள திருச்சி மாவட்டம் லால்குடி, புறத்தாக்குடி, முசிறி கரட்டாம்பட்டி, உறையூர் பாக்குபேட்டை, தில்லைநகர், ரஹ்மானியாபுரம், உறையூர் பாளையம் பஜார், பீமநகர், அண்ணா நகர், புத்தாநத்தம், மணப்பாறை, மண்ணச்சநல்லூர், தென்னூர் ஆழ்வார்தோப்பு, நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதி, அண்டகொண்டான், சமயபுரம் கூத்தூர், காஜா நகர், காஜாமலை, துவாக்குடி மலை ஆகிய பகுதிகள் காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. இந்த பகுதிகளில் தடுப்புகளை ஏற்படுத்தி சாலைகள் அடைக்கப்பட்டன. வெளிநபர்கள் யாரும் உள்ளே செல்லவும், அங்கிருந்து யாரும் வெளியே வரவும் காவல் துறையினர் தடை விதித்துள்ளனர்.