நாடு முழுவதும் வெங்காய விலை உச்சத்தைத் தொட்டுள்ளது. ஒரு கிலோ 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசியல் வட்டாரத்திலும் வெங்காய விலை பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
அந்த வகையில் எகிப்து நாட்டில் இருந்து கப்பல் மூலம் குளிர்சாதன கண்டெய்னர்களில் அடைக்கப்பட்ட வெங்காயம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வந்தடைந்தது. மும்பையில் இருந்து மூன்று லாரிகள் மூலம் 30 டன் வெங்காயம் இன்று காலை திருச்சி வந்தது. திருச்சி பழைய பால்பண்ணை அருகே உள்ள வெங்காயம் மண்டியில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒரு கிலோ 140 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தை கிலோ 100 ரூபாய்க்கு வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். ஆனால் வெங்காயம் வழக்கமான நிறத்திலிருந்து மாறி இருப்பதால் சில்லரை வியாபாரிகள் இதை வாங்க தயக்கம் காட்டுகின்றனர். இதனால் இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் அப்படியே தேங்கி கிடக்கிறது என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.