திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. விமானத்தில் வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவதும் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தற்போது தொடர் கதையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து நேற்று (ஜூன் 11) வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வருகை தந்த பயணி ஒருவர் நூதன முறையில் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு (Airport Air Intelligence Wing Customs Officers) ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தனி தனியாக அதிரடி சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் சந்தேகத்தின் பேரில் ஆண் பயணி ஒருவரை சோதனை செய்த போது அவரது ஆசனவாயில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட கடத்தல் தங்கம் சிக்கியது. அவர் கடத்தி வந்த தங்கம் 161 கிராம் எடை என்றும் அதன் இந்திய மதிப்பு ரூபாய் 9 லட்சத்து 75 ஆயிரத்து 499 என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.