திருச்சி தெற்கு புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
திருச்சி அரியமங்கலம், காட்டூர், பொன்மலை ஆகிய மூன்று பகுதிகளில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட செயலாளரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான குமார் கலந்துகொண்டு உறுப்பினர்களை வரவேற்று, உறுப்பினர் அட்டையை வழங்கினார்.
இந்த நிகழ்வுகளில் குமார் பேசியதாவது:
தற்போதைய அதிமுக அரசு மக்களுக்குப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் அராஜகம் அதிகரிக்கும். திருச்சியைப் பொறுத்தவரை பல்வேறு சொத்துகளை அபகரிக்கும் செயல்களில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு ஈடுபட்டார். தற்போது ஏழைகள் நடத்தும் புரோட்டா கடையில் நுழைந்து புரோட்டாவையும், பிரியாணி கடையில் பிரியாணியையும் திமுகவினர் திருடுகின்றனர்.
பெரம்பலூரில் உள்ள பியூட்டி பார்லரில் நுழைந்து பெண்களை திமுகவினர் அடித்து உதைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது. அதனால் திமுக ஆட்சி அமைந்தால் அது மக்கள் விரோத அரசாகத்தான் இருக்கும்.
பொதுமக்களுக்கும் அரசு அலுவலர்களுக்கும் இடையே அதிமுக நிர்வாகிகள் பாலமாகச் செயல்பட வேண்டும். கட்சியினருக்கும் கட்சிக்கும் விசுவாசமாக இருந்தால் பதவிகள் தேடிவரும். தற்போது முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் கிளைச் செயலாளராக இருந்து படிப்படியாக வளர்ந்து தற்போது உயர் பதவியை அடைந்துள்ளார்.
அதேபோல் நீங்களும் (அதிமுக தொண்டர்கள்) விசுவாசத்துடன் உண்மையாக உழைத்தால் உயர்ந்த பதவி உங்களைத் தேடிவரும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வுகளில் திருச்சி தெற்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் அருண் நேரு, திருவெறும்பூர் பகுதிச் செயலாளர் பாஸ்கர் என்கிற கோபால் ராஜ், அரியமங்கலம் பகுதி செயலாளர் தண்டபாணி, பொன்மலை பகுதி செயலாளர் தஞ்சாயி பாலசுப்பிரமணியன், முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர்கள் கயல்விழி சேகர், சாந்தி, வட்டச் செயலாளர்கள் ரவி, சங்கர், தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஜெயராஜ், நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் திமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த பலர் மாவட்டச் செயலாளர் குமார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்குச் சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.