திருச்சி:முக்கொம்பு மேலணையில் ரூபாய் 387.60 கோடி மதிப்பீட்டில் கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. ஏறத்தாழ 95% பணிகள் நிறைவு பெற்றுள்ளன. கொள்ளிடம் ஆற்றில் புதிதாக கட்டப்பட்டு வரும் தடுப்பணை மற்றும் புதிய பாலத்திற்கான பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசும்போது, 'வருகிற ஜூன் 26ஆம் தேதி முதலமைச்சர் திருச்சிக்கு வருகை தந்து காலை 11 மணி அளவில் புதிதாக கட்டப்பட்ட முக்கொம்பு கொள்ளிடம் மேலணை பாலத்தை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு இந்தப் பாலம் கட்ட திட்டமிடப்பட்டு, தற்போது 95 விழுக்காடுப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்தப் புதிய பாலம், பழைய பாலம் போலவே குறுகலான பாலமாக திட்டமிடப்பட்டுள்ளது.
அதே நேரம் இந்தப் பாலத்தில் மேலும் சில புதிய விஷயங்களைக் கொண்டுவர உள்ளோம். அதை முதலமைச்சர் தெரிவிப்பார். திருச்சியில் புதிய காவிரி பாலம் கட்ட ஏற்கெனவே ரூ.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. தற்போது ரூ.130 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சி நகரின் காவிரி ஆற்றில் புதிய பாலம் மற்றும் எக்ஸ்பிரஸ் எலிவேட்டர் உள்ளிட்ட திட்டங்கள் விரைவில் தொடங்கப்படும்’ என்றார்.
மேகதாது புதிய அணை தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, 'நான் திருச்சி மந்திரி. என்னிடம் திருச்சி கேள்விகளை மட்டும் கேளுங்கள்' என்றார்.
'நான் திருச்சி மந்திரி; என்னிடம் திருச்சியைப்பற்றி மட்டும் கேளுங்கள்' - கடுகடுத்த கே.என்.நேரு இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: பதவியேற்ற நாளிலேயே அதிரடியை ஆரம்பித்த திருச்சி ஆட்சியர்!