திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அகலங்கநல்லூர் ஊராட்சியில் உள்ளது தாரானூர் கிராமம். இந்த கிராமத்தின் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன்(36). இவரது மனைவி சந்தியா (30). இவர்களுக்கு சந்தோஷ் (4), சர்வேஷ் (3) என இரு மகன்கள் உள்ளனர்.
மகேந்திரனும் அவருடைய அண்ணன் சக்திவேலும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். மகேந்திரனும், அவரது மனைவி சந்தியாவும் தினக்கூலி வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில், சந்தியா வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்த போது, வீட்டின் சந்துப் பகுதியில் மின்சாரம் செல்லும் எர்த் வயர் பகுதியில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதை கவனிக்காத சந்தியா சந்துக்குள் சென்றபோது எர்த் வயரிலிருந்து மின்சாரம் பாய்ந்தது.
மனைவியின் அலறல் சத்தம்கேட்டு காப்பாற்றச் சென்ற மகேந்திரன் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனைக்கண்ட மகேந்திரனின் அண்ணன் சக்திவேல் அவர்களைக் காப்பாற்ற முயன்றார். ஆனால் அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டனர்.
மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தம்பதியினர் இதில், கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த சக்திவேலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த லால்குடி காவல்துறையினர் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த இச்சம்பவம் கிராமத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மின்சாரம் செலுத்தி மனைவியை கொலை செய்ய முயற்சி: 5 மாதம் கழித்து இளைஞர் கைது