திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில், கிழக்கு வாசல் கோபுரத்தின் சுண்ணாம்பு காரைகள் இடிந்து விழுந்ததை பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் தேசியச் செயலாளருமான எச்.ராஜா பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எச்.ராஜா, "ஶ்ரீரங்கம் கிழக்கு கோயில் கோபுரம் இடிந்தது ஒரு பிரச்னையா? என்று கேட்டவன் மானங்கெட்டவர். அவர் இந்து மதத்துக்கான விரோதி. இரண்டு ஆண்டுகளுக்கு முன் பாலாலயம் செய்த கோபுரத்தில் காரையே விழாமல் பராமரித்திருக்க வேண்டும். ஆனால், அப்படி ஏதும் இங்கு நடக்கவில்லை.
இந்து மதத்தை தீர்க்கமாக பரப்பக்கூடியவரே அறநிலையத்துறை அமைச்சராக இருக்க வேண்டும். அல்லேலூயா கோஷம் போட்டவர் அறநிலையத் துறையில் இருக்கக் கூடாது. கோயில் திருப்பணிகளுக்கு நன்கொடை கொடுத்தவர்கள் பெயரை குறிப்பிட்டு அவர் செலுத்திய தொகையை வெளிப்படையாக கூறுவதில்லை. வருமான வரித்துறை சட்டத்தில் 20 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக வாங்கினாலோ அல்லது கொடுத்தாலோ கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கலாம். அதனால் ஒரு நன்கொடையாளரையும் அணுகுவதில்லை. அமைச்சராக இருப்பவர் வீட்டின் காரை இடிந்து விழுந்தது போல் இதுவும் இடிந்துள்ளது. இது ஒரு பிரச்னையா என்று கூறியிருக்கக் கூடாது'' என வெளிப்படையாக அவரின் குடும்பத்தை இகழ்ந்து கருத்து தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "நாகரிகமானவராக இருந்தால், கோபுரம் இடிந்தது, ஹிந்துக்கள் மனம் புண்பட்டதற்கு மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறியிருப்பார். இவர் நாகரிகமானவர் இல்லை. கட்டப்பஞ்சாயத்து செய்பவர். கோயில் நிலங்களை வேறு காரணங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்று நீதிபதி அறிவுறுத்திய போதிலும், கள்ளிமந்தயத்தில் 220 ஹெக்டரில் உள்ள பழனி கோயிலுக்கான ஒருங்கிணைந்த கோசாலை நிலம், சிப்காட்டாக மாற்றப்படும் என்கின்றனர். அமைச்சராக இருப்போரே மதப்பிரச்னையைக் கொண்டு வந்துள்ளார்.