திருச்சி: விநாயகர் சதுர்த்தியன்று மதுபானக் கடையை அடைக்க வேண்டும் என இந்து அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆலோசனைக் கூட்டம்: விநாயகர் சதுர்த்தி வருவதையொட்டி, விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் சிலை கரைப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு மற்றும் ஆலோசனை கூட்டம், திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநகர காவல் துணை ஆணையர்கள், தெற்கு, வடக்கு மற்றும் தலைமையிடம், அனைத்து சரக காவல் உதவி ஆணையர்கள், அனைத்து சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர்கள், இந்து அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என சுமார் 200 நபர்கள் பங்கேற்றனர்.
வருகின்ற 18 ஆம் தேதியன்று நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழா (சிலை பிரதிஷ்டை) மற்றும் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. திருச்சி மாநகரில் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது பிரச்சினைக்குரிய இடங்கள் கண்டறியப்பட்டு, ஊர்வலம் செல்லும் பாதைகளில் உள்ள முக்கிய சந்திப்புகளில் ஊர்வலம் தடையில்லாமல் விரைவாக செல்லவும், நிகழ்ச்சியின் போது எவ்வித அசம்பாவிதமும் நடைபெறா வண்ணம் நிகழ்ச்சியை நடத்திட பாதுகாப்பு முன்னேற்பாடுகள் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.
பட்டாசு வெடிக்க கூடாது: இக்கூட்டத்தில், திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி பேசுகையில், “விநாயகர் ஊர்வலத்தில் கொண்டு வரப்படும் சிலைகள் 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது. அரசியல் கட்சிகள் மற்றும் சாதி தொடர்பான பேனர்கள் வைக்கக்கூடாது. விழா நடைபெறும் இடத்தில் ஒலிபெருக்கி காலை மாலை ஆகிய நேரங்களில் 2 மணிநேரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிக்க கூடாது.
சிலைகளை மாட்டுவண்டி, மீன்பாடி வண்டி, மூன்று சக்கர வாகனங்களில் எடுத்து வரக்கூடாது. சிலை ஊர்வலம் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே செல்ல வேண்டும். புதிய வழி தடத்தில் செல்லக்கூடாது. சிலை வைக்கப்படும் இடத்தின் உரிமையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகளிடம் தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும். ஊர்வலத்தின் போது எவ்வித கோஷமும் போட அனுமதிக்க கூடாது.