திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் விஜய பாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். செய்தியாளர்களின் கேள்விகளும், அமைச்சரின் பதில்களும்...
மழைக்காலம் தொடங்கும்போது அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
- தொடர்ந்து மழைக்காலமாக உள்ளதால், தட்பவெப்பநிலை மாறும்போது நோய் தொற்று பரவக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதற்கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். குறிப்பாக வடமாநிலங்கள், அண்டை மாநிலங்களில் நிபா போன்ற வைரஸ் தாக்குதல் இருக்கிறது. தமிழ்நாட்டில் அது இல்லாத நிலையை உருவாக்குவதும், அதை உறுதிப்படுத்தவும் தொடர் நடவடிக்கை எடுத்துவருகிறோம். இன்றைக்குக்கூட மருத்துவ இயக்குநர் வடிவேலு தலைமையில் 7 மாவட்டங்களிலும் நடமாடும் மருத்துவக் குழு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
- இதில் காய்ச்சலுடன் கேரளாவில் இருந்து தேனி, கன்னியாகுமரி, திருவள்ளூர், திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு வரக்கூடியவர்களை பரிசோதனை செய்வதற்கும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எந்தச் சூழ்நிலையிலும் யாருக்கும் எவ்விதமான காய்ச்சல் என்றாலும் உடனடியாக முடிவுகள் கண்டிப்பாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் நிபா வைரஸ் எளிதில் நுழைந்துவிடாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு செய்துள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதார செயலர் மூலம் கடிதம் எழுதப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. பொதுமக்கள் பழங்கள், காய்கறிகளை கழுவாமல் சாப்பிடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.