திருச்சி: வையம்பட்டி அடுத்த செக்கணம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் அருள்மிகு செம்மலை கன்னிமார் மாரியம்மன், கருப்பசாமி கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள 28 கடைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் வாடகைத் தொகை அதிகமாக இருப்பதாகக் கூறி கடந்த சில ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் கடைக்காரர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையிலிருந்து வரும் நிலையில், வாடகை நிலுவைத் தொகையைச் செலுத்த வாடகைதாரர்களுக்கு அறிவிப்பு வழங்கியும், நேரில் அறிவுறுத்தியும் சிலர் வாடகையைச் செலுத்த முன்வரவில்லை.
இதையடுத்து கடை வாடகை உடனடியாக வசூல் செய்திடவும், வாடகை செலுத்த மறுக்கும் கடைக்காரர்களின் கடைகளுக்குச் சீல்வைத்திடவும் உயர் அலுவலர்கள் மூலம் தெரிவிக்கப்பட்டது.