திருச்சி: கடந்த மே 30 முதல், வரும் 30 ஆம் தேதி வரை, பா.ஜ.க சார்பில், மக்கள் தொடர்பு பேரியக்கம் நடத்தப்படுகிறது. இந்த இயக்கம் தொடர்பாக, கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, திருச்சியில், நேற்று செய்தியாளர்களிடம், “நீண்ட கால பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதும், மக்கள் திட்டங்களைச் செயல்படுத்துவதும் தான் நல்ல அரசு. பல நெருக்கடிகளுக்கு இடையே, பா.ஜ.க அரசு பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
கள்ளச்சாராயம் குடித்து, 22 பேர் இறந்த போது, முதல்வரும், அமைச்சர் செந்தில் பாலாஜியும் ராஜினாமா செய்ய வேண்டும், என்று கேட்காதவர்கள், ரயில் விபத்து நடந்தவுடன் பேசத் துவங்கி உள்ளனர். நாட்டில், தொடர்ந்து, 34 மாதங்கள் எந்த விதமான ரயில் விபத்தும் நடைபெறவில்லை. இந்த கோரமண்டல் ரயில் விபத்து, எதிர்பாராத சம்பவமாக நிகழ்ந்து உள்ளது. அதற்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய சி.பி.ஐ விசாரணை நடக்கிறது. விசாரணை அறிக்கை வரும் வரை காத்திருக்க வேண்டி உள்ளது. விபத்து நிகழ்ந்த இடத்தில், ரயில்வே துறை அமைச்சர் இருந்து கொண்டு, மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். பிரதமர் உடனடியாக அங்குச் சென்று பார்வையிட்டு, ராணுவத்தை அனுப்பி மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தி உள்ளார். மாற்றுக் கட்சியைச் சேர்ந்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் திருப்திப்படும் அளவிற்கு, மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்