திருச்சி:சனாதனம் பற்றி விமர்சித்து பேசிய அமைச்சர் உதயநிதியை கைது செய்ய வலியுறுத்தி, திருச்சி ஸ்ரீரங்கத்தில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, “உண்மைகளை பொய் என்றும் பொய்யை உண்மைகள் என்று பேசுபவர்கள் திமுகவினர். ஆண்டாள் நாச்சியாரை அவதூறு பரப்பிய வைரமுத்துவை கைது செய்யாமல், சனாதனம் பற்றி பேசும் உதயநிதியை கைது செய்யாமல், தமிழ்நாடு காவல் துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. மிக விரைவில் திராவிட இயக்கங்களே இல்லாமல் அழித்து, பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரும்.
பகவத் கீதையில், குணத்தின் அடிப்படையில் வர்ணங்களை உருவாக்கி இருப்பதாக கிருஷ்ணபரமாத்மா குறிப்பிடுகிறார். அதே போல, திருவள்ளுவரும் அந்தணர், அரசர், வணிகர் வேளாளர் என்ற நான்கு வர்ணங்களை குறிப்பிட்டு இருக்கிறார். பகவத் கீதையில் சொன்னதை பேசிய வள்ளுவர் சனாதனி. கால்டுவெல் வந்த பின், மதமாற்றத்துக்காக பல பொய்யான விஷயங்களை கடைபிடித்தனர், என்று அமெரிக்க அறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழர்களை 180 ஆண்டுகளாக திருப்பிப் திருப்பி பொய்யை சொல்லி அவனை முட்டாளாக்கி வைத்துள்ளனர். அதை மாற்றும் வரை பாஜக ஓயப்போவதில்லை.