தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புறம்போக்கு நிலத்தில் தோட்டம் அமைத்த காவலர் தம்பதியினர்; அதிரடியாக அகற்றிய கோட்டாட்சியர் - வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது

திருச்சி அருகே புறம்போக்கு நிலத்தில் காவலர்கள் தோட்டத்தை உருவாக்கி ஆக்கிரமிப்பு செய்த இடங்களை, அதிரடியாக செயல்பட்டு கோட்டாட்சியர் மீட்டனர்.

புறம்போக்கு நிலத்தில் தோப்பு அமைத்த காவலர் தம்பதியினர்
புறம்போக்கு நிலத்தில் தோப்பு அமைத்த காவலர் தம்பதியினர்

By

Published : Oct 9, 2022, 4:53 PM IST

Updated : Oct 9, 2022, 5:19 PM IST

திருச்சி: நவலூர் குட்டப்பட்டு கிராமத்தைச்சேர்ந்தவர் சுமதி. கே.கே.நகர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவலராகப் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ஜெகநாதன் கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவலராகப்பணியாற்றி வருகிறார்.

இவர்கள் வசிக்கும் அதே பகுதியில் உள்ள அரசுக்குச்சொந்தமான புறம்போக்கு நிலத்தை சுமார் ஒரு ஏக்கர் அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்து அதில் தென்னை, மா, கொய்யா உள்ளிட்ட மரக்கன்றுகளை நடவு செய்து, கேட் போட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த ஆக்கிரமிப்பு குறித்து வந்த புகாரின் அடிப்படையில் வட்டாட்சியர் மூலம் பலமுறை அறிவிப்புகள் கொடுத்தும் அவர்கள் அந்த இடத்தை காலி செய்யவில்லை. இதனையடுத்து இதுகுறித்த தகவலை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்குக்கொண்டு சென்றனர். அவரின் அனுமதி மற்றும் காவல்துறையின் உதவியோடு ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், வட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் சென்று ஆக்கிரமிப்பாளர்கள் போட்டிருந்த கருங்கல் தூண் கம்பி வேலியை அதிரடியாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்த காவலர் தம்பதியினர் அலுவலர்களைத் தடுத்து, எங்களுடைய பட்டா நிலத்தை அளந்து கொடுத்தால் தான், அரசுக்குச்சொந்தமான புறம்போக்கு நிலத்தை எடுக்க அனுமதிப்போம் என சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், வருவாய்த்துறையினர் அவர்களின் பேச்சை கண்டு கொள்ளாமல் அதிரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் இறங்கினர். அப்போது இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினர் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தது மட்டுமல்லாமல், அகற்ற வந்த அலுவலர்களிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டது "வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது'' என்றனர்.

புறம்போக்கு நிலத்தில் தோட்டம் அமைத்த காவலர் தம்பதியினர்; அதிரடியாக அகற்றிய கோட்டாட்சியர்

இவர்களைப் போன்றவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்தால் தான், இனி வரும் காலங்களில் அரசு நில ஆக்கிரமிப்பில் யாரும் ஈடுபட மாட்டார்கள் என கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: செல்போன் பேசிக்கொண்டு சாலையை கடக்க முயன்ற இளைஞர் உயிரிழப்பு!

Last Updated : Oct 9, 2022, 5:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details