தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோமதிக்கு பாதுகாப்பு வழங்க காவல் துறை அலட்சியம் - Asian Athelete championship Gomathi

திருச்சி: ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்று சொந்த ஊருக்குத் திரும்பிய கோமதி மாரிமுத்துவைக் காண நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டதால் நெரிசல் ஏற்பட்டது. காவல் துறையினர் உரிய பாதுகாப்பு வழங்காததே இதற்குக் காரணம் என புகார் எழுந்துள்ளது.

மோமதி மாரிமுத்து

By

Published : Apr 29, 2019, 8:00 AM IST

திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள முடிகண்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோமதி (30).பெங்களூரு வருமானவரித் துறையில் பணியாற்றிவரும் இவர், சமீபத்தில் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள விளையாட்டுப் போட்டியில் மகளிர் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்று நாட்டிற்குப் பெருமைச் சேர்த்தார்.

கத்தார் நாட்டில் இருந்து சென்னைக்கு வந்த அவருக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்தனர். இதையடுத்து, சென்னையில் இருந்து அவர் விமானம் மூலம் இன்று மாலை திருச்சிக்கு வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவருக்கு நூற்றுக்கணக்கான மக்கள், குடும்பத்தினர், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர்,

'நான் திருச்சியில் பிறந்தது எனக்குப் பெருமையாக இருக்கிறது. ஆசிய தடகள விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றதை விட இங்கு அளிக்கப்படும் பாராட்டு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கிழிந்த காலணி அணிந்திருந்தது உண்மைதான். அது எனக்கு அதிர்ஷ்டமான காலணி. இரண்டு கால்களிலும் வெவ்வேறு காலணிகள் இருந்தது. அது டிசைன். வேறு ஒன்றும் கிடையாது. எனது வளர்ச்சிக்கு உதவிய திருச்சி காவலர் ராஜாமணி குறித்து பல இடங்களில் குறிப்பிட்டு உள்ளேன்.

அவரிடம்தான் நான் பயிற்சிப் பெற்றேன் என்று எனது அனைத்துப் பேட்டியிலும் தெரிவித்துள்ளேன். முன்பு என்னைத் தெரியாததால் யாரும் உதவி செய்யவில்லை. தற்போது தெரிந்துவிட்டதால் அரசு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் உதவி செய்ய முன்வருகின்றனர்.

அடுத்து ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள அனைவரும் உதவி செய்வதாக உறுதி அளித்துள்ளனர். அரசு தற்போது எனக்கு உதவி செய்துள்ளதையடுத்து, ஏழ்மையில் இருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு உதவி செய்வதாகவும் அரசு உறுதி அளித்துள்ளது.

அதனால் அனைத்து வீரர்களும் கடுமையாக பயிற்சி எடுக்க வேண்டும். எனது கிராமத்தை தத்தெடுத்து வளர்ச்சிப் பாதையில் கொண்டுச் செல்வேன். அதற்கு அரசு உதவி செய்ய வேண்டும்' என்றார்.

திருச்சி வந்தடைந்த கோமதி மாரிமுத்துவுக்கு அவரது குடும்பத்தினர், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அவரை வரவேற்கத் தயராக இருந்தனர். இதனால், திருச்சி விமான நிலையத்தின் விஐபி வளாகத்திலிருந்து வெளியே வருவதற்கு கோமதி திக்குமுக்காடிப் போனார். நீண்ட போராட்டத்திற்கு பின்னரே அவர் வெளியே வந்து காரில் ஏறிச் சென்றார்.

பொதுவாக, திருச்சி விமான நிலைய பகுதியில் வழக்கமாக விஐபி வருகையின்போது காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்துவார்கள். ஆனால், கோமதி மாரிமுத்து விஐபி வளாகத்தில் இருந்து வருகை தந்தபோது, நூற்றுக்கணக்கானோர் மட்டுமே விமான நிலையத்தில் கூடி இருந்தனர். இருப்பினும், காவல் துறையினர் குறைந்த எண்ணிக்கையிலேயே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஒரு ஆய்வாளர், இரண்டு உதவி ஆய்வாளர், இரண்டு காவலர்கள் மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால், வந்திருந்த கூட்டத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து, கோமதியை வரவேற்க குவிந்தவர்கள் மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சொந்த ஊரில் கோமதி மாரிமுத்துக்கு பாதுகாப்பு வழங்க காவல் துறையினர் அலட்சியம்

கடந்த சில தினங்களாக தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுவந்த கோமதி மாரிமுத்துக்கு, உரிய பாதுகாப்பு வழங்குவதில் காவல் துறையினர் அலட்சியம் காட்டியதாக புகார் எழுந்துள்ளது. இதனிடையே, கோமதியைப் பார்க்காமலேயே சிலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details