திருச்சி:திருச்சி என்.ஐ.டி.யில் 'இக்னைட் என்.ஐ.டி' எனும் குழு இயங்கிவருகிறது. இக்குழுவில், உள்ள என்.ஐ.டி. மாணவர்கள், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக ஜே.இ.இ உள்ளிட்ட பல்வேறு நுழைவுத்தேர்வுகளுக்கு பயிற்சியளித்துவருகின்றனர்.
இங்கு பயிற்சி பெற்ற செவல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவரான அருண்குமார், என்.ஐ.டி. திருச்சி மாணவர்களிடம் பெற்ற பயிற்சியின் பயனாக ஜேஇஇ மெயின் நுழைவுத்தேர்வில், 98.24 விழுக்காடு தேர்ச்சி பெற்று அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் 17,061ஆவது இடமும், ஒபிசி தரவரிசைப் பரிவில் 3,649ஆவது இடத்தையும் பிடித்துள்ளார்.
அருண்குமாருக்கு பள்ளி வகுப்பு நடைபெறும் நேரம், பயிற்றுவிக்கும் என்.ஐ.டி. மாணவர்களின் வகுப்புநேரம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு சரியான முறையில், மாணவருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய இக்னைட் என்.ஐ.டி. குழுவின் ஒருங்கிணைப்பாளர் எஸ். ரோகித், " ஊரடங்கு காரணமாக தொலைபேசி அழைப்புகள் மூலம் பயிற்சியளித்தோம். வாய்மொழியாக விளக்குவது அவ்வளவு பயனுள்ளதாக இல்லை. அதனால், பயிற்சியளிப்பவர்களுக்கு டிஜிட்டல் பேட்கள் அனுப்பப்பட்டு அதன்வழி பயிற்சியளிக்கப்பட்டது. தற்போது அருண்குமாருக்கு ஜேஇஇ அட்வான்ஸ் தேர்விற்கான பயிற்சியளித்துக் கொண்டிருக்கிறோம்" என்றார்.