தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுதந்திர போராட்ட வரலாறை திருத்தி எழுத்த வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி

திருச்சியில் நடந்த முப்பெரும் விழாவில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஐரோப்பிய மொழிகளை விட வளமானவை எனக் கூறினார்.

சுதந்திர போராட்ட வரலாறை திருத்தி எழுத்த வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி
Etv Bharatதமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஐரோப்பிய மொழிகளை விட வளமானவை - ஆளுநர் ரவி

By

Published : Dec 13, 2022, 7:37 AM IST

Updated : Dec 13, 2022, 9:59 AM IST

சுதந்திர போராட்ட வரலாறை திருத்தி எழுத்த வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி

திருச்சி: திருச்சி தேசிய கல்லூரி மற்றும் தேசிய சிந்தனை கழகம்(அகில பாரத பிரக்ஞா பிரவாஹ்) இணைந்து சுதந்திர திருநாள் அமுத பெருவிழா, மகாகவி பாரதியார் பிறந்த நாளை தேசிய மொழிகள் தினமாகவும் மற்றும் ராமலிங்க வள்ளலாரின் 200வது பிறந்த தினத்தையும் சிறப்பிக்கும் வகையில் "முப்பெரும் விழா" திருச்சி கருமண்டபம் அருகே உள்ள தேசிய கல்லூரியில் நேற்று (டி.12) நடைபெற்றது. முப்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினராகத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இதனையடுத்து அவரது உரையில், ‘நம் நாட்டில் இந்திய விடுதலை போர் மிகப்பெரிய இயக்கமாக நடந்தது. அதில் ஏராளமானோரின் பங்களிப்பு இருந்தது. அன்றைய காலத்தில் இந்தியத் தேசிய காங்கிரஸ் இருந்தது. அதில் இருந்தவர்களும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார்கள். ஆனால் அவர்களைத் தவிர ஏராளமானோரும் பங்கேற்றார்கள்.

இந்திய சுதந்திர போராட்ட வரலாறு இந்திய தேசிய காங்கிரஸை மட்டும் மையப்படுத்தப்படுத்தி ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு உயிர் தியாகம் செய்துள்ளனர். கிராமம் கிராமமாக போராட்டங்கள் நடந்துள்ளது எனவே சுதந்திர போராட்டம் மக்களை மையப்படுத்தி ஆவணப்படுத்தப்படுத்தி அது திருத்தி எழுதப்பட வேண்டும்.

பிரிட்டிஷ் வருகைக்கு முன் இந்தியக் கிராமங்கள் தன்னிறைவாக இருந்தன. ஆனால் அவர்கள் வருகைக்குப் பின் பல வரிகள் விதிக்கப்பட்டதால் கிராமங்களில் தன்னெழுச்சியான போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவர்களும் சுதந்திரத்திற்காக தான் போராடினார்கள். சுதந்திரத்திற்காகப் போராடிய அனைவரும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் தான்.

இன்று சுதந்திர போராட்ட வீரர்களை ஆவணப்படுத்த அவர்களின் சிறை சென்ற ஆவணங்களைக் கேட்டால் ஓய்வூதியத்துக்காக என கூறி சுய மரியாதை காரணமாக பலர் அந்த ஆவணங்களைத் தரமாட்டார்கள். அதனால் அவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்படாமல் போய்விடும் எனவே அதையெல்லாம் முறைப்படுத்த வேண்டும்.

நரேந்திர மோடி ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தான் சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து மக்களுக்கு அதிகம் தெரிந்தது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸே அவ்வாறு தான் மக்களுக்கு தெரிந்தார். நான் தமிழ்நாட்டிற்கு வந்த பொழுது தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து பட்டியல் கேட்டேன் வெறும் 30 பேர் பட்டியல் மட்டும் தான் தந்தார்கள் தற்பொழுது நான் அது குறித்து கவனம் செலுத்தும் போது 800-க்கும் அதிகமானோர் பட்டியல் உள்ளது.

தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஐரோப்பிய மொழிகளை விட வளமானவை:இன்று காலனியாதிக்க சிந்தனை நம் மனத்தில் உள்ளது. காலனியாதிக்க சிந்தனை எச்சத்தின் வெளிப்பாடே ஆங்கில மொழி தான் உயர்ந்தது என்கிற எண்ணம். ஆனால் நம் தமிழ், சமஸ்கிருதம் போன்றவை ஐரோப்பிய மொழிகளைக் காட்டிலும் வளமிக்கவை அதை நாம் உணர வேண்டும்.

1857 ஆம் ஆண்டு தான் சுதந்திர போராட்டம் தொடங்கியதாக வரலாற்றில் பதிவாகி உள்ளது. ஆனால் 1806 ஆம் ஆண்டே சிப்பாய் கலகம் வேலூரில் நடந்தது அதில் பல பிரிட்டிஷ் வீரர்கள் கொல்லப்பட்டார்கள். காலனியாதிக்கம் தொடங்கிய போதே அதை எதிர்த்து நாம் போராடினோம் அவையெல்லாம் பதிவு செய்ய வேண்டும். நம் மக்களின் அடையாளம், கலாச்சாரம் போன்றவற்றை அழிக்க பிரிட்டிஷ் முயற்சித்த போதே அதை எதிர்த்துப் போராடியுள்ளோம்.

ஆயுத போராட்டங்களை பதிவு செய்ய வேண்டும்:சுதந்திர போராட்ட வரலாற்றில் அகிம்சை போராட்டம் தான் அதிக அளவு பதிவாகி உள்ளது. ஆயுத போராட்டங்கள் அதிகம் பதிவாக வில்லை அவற்றையும் பதிவு செய்ய வேண்டும். சுதந்திர போராட்டம் என்பது எழுதப்பட்டும் இருக்கும், எழுதப்படாமல் நாடகம் உள்ளிட்ட கலைகளாகவும் இருக்கும் எனவே அவற்றையும் ஆவணப்படுத்த வேண்டும்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் கோடிக்கணக்கானோர் போராடி உள்ளார்கள். பலர் உயிர் தியாகம் செய்துள்ளார்கள். அவர்கள் பலரின் வரலாறுகள் பதிவு செய்யப்படாமல் உள்ளது. எனவே ஆராய்ச்சி மாணவர்கள், வரலாற்றறிஞர்கள் போன்றோர் இந்த வரலாற்றை சரியாகவும் முறையாகவும் ஆவணப்படுத்தி அதைத் திருத்தி எழுத வேண்டும்" இவ்வாறு கூறினார்.

இதையும் படிங்க:காஷ்மீர் செய்தியாளருக்கு ஐ.நா.வின் மதிப்புமிக்க விருது வழங்கல்

Last Updated : Dec 13, 2022, 9:59 AM IST

ABOUT THE AUTHOR

...view details