கரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவை, தளர்வுகளின் அடிப்படையில் மே மாதம் இறுதி முதல் மீண்டும் தொடங்கியது. இதன் அடிப்படையில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு உள்நாட்டு சேவை தொடங்கி நடைபெற்று வருகிறது.
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் மீட்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. திருச்சி விமான நிலையத்திலிருந்து துபாய், மலேசியா, சிங்கப்பூர், அபுதாபி, மஸ்கட் உள்ளிட்ட நாடுகளுக்குவிமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த விமானத்தில் பயணம் செய்பவர்கள் அதிகளவில் தங்கத்தை கடத்தி வருவது அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு துபாயில் இருந்து வந்த எட்டு நபர்களிடமிருந்து எலக்ட்ரானிக் பொருட்களும், மது வகைகள், சிகரெட் பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஏழு நபர்களிடம் இருந்து ரூபாய் ஒன்றரை கோடி மதிப்பிலான 2,596 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று நேற்று இரவு திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் சோதனை செய்தனர்.
இந்த சோதனையில், விருத்தாசலத்தைச் சேர்ந்த சம்சுதீன் (32) என்பவர், தனது உடமைகளில் மறைத்து 2,600 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இந்த கடத்தல் தங்கத்தின் மதிப்பு ரூ.1. 30 கோடியாகும். இதனைத் தொடர்ந்து சம்சுதீன் மீது வழக்குப் பதிவு செய்த நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.