திருச்சி: திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட முக்கிய வெளிநாடுகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வரும் நிலையில், வெளிநாட்டில் இருந்து விமானத்தில் வரும் பயணிகள் சட்ட விரோதமாக தங்கம் கடத்தி வருவதும், அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், மலேசியாவில் இருந்து திருச்சி வரும் விமானத்தில் பயணிகள் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து, விமான நிலையம் முழுவதும் பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர்.
மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சந்தேகத்திற்குரிய மூன்று பயணிகளிடம், வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது மேலும் சந்தேகம் எழுந்த நிலையில். அம்மூன்று பேரும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதில் இரண்டு ஆண் பயணிகள் தங்கள் அணிருந்த உள்ளாடையில் தங்க பேஸ்டுகளை மறைத்து கடத்தி எடுத்து வந்துள்ளனர் என்பதும், மேலும் ஒரு பெண் பயணி சானிட்டரி நாப்கினில் தங்க பேஸ்டை மறைத்து கடத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து, மூன்று நபர்களிடம் இருந்த 1,414 கிராம் (176.75 சவரன்) எடையுள்ள 89 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க பேஸ்டுகளை வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் தங்க கடத்தலில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:ரேஷன் அரிசி கடத்தல் விவகாரம்: உடந்தையாக இருந்த பெண் அதிகாரி உட்பட 2 பேர் கைது.. !