2016ஆம் ஆண்டு திருப்பூரில் எவ்வித ஆவணங்களும் இன்றி சுற்றித் திரிந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஸ்டீபன் ஜான் ஓபுஜி( 32) என்பவரை திருப்பூர் காவல் துறையினர் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். சமீபத்தில் திருச்சி மத்திய சிறையில் இருந்து ஸ்டீபன் ஜான் ஓபிஜி தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் திருச்சி மத்திய சிறை வட்டாரங்களிலும், காவல்துறை வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தப்பி ஓடிய ஸ்டீபனை பிடிப்பதற்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் கே.கே நகர் காவல் நிலைய ஆய்வாளர் சகாயம் அன்பரசு தலைமையிலான எட்டு பேர் அடங்கிய சிறப்பு படை அமைக்கப்பட்டது. தப்பியோடிய கைதியை பிடிக்க சிறப்பு படையினர் பெங்களூர், ராஜஸ்தான், ஹரியானாவை தொடர்ந்து இறுதியில் டெல்லிக்கு அருகே உள்ள சோனிபட் எனுமிடத்தில் அந்த நபரை பிடித்தனர்.