திருச்சி: துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட உலகின் பல்வேறு முக்கிய நாடுகளுக்கு, திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. அயல்நாடுகளில் இருந்து விமானம் மூலம் வரும் பயணிகள், தங்கம் மற்றும் கரன்சி நோட்டுகள் கடத்தி வருவதும் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
நேற்று (மே 30) திருச்சி விமான நிலையத்தில் இருந்து சார்ஜா செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. சார்ஜா செல்ல இருந்த விமானத்தில், கரன்சி நோட்டுகள் சட்ட விரோதமாக கடத்தி செல்லப்படுவதாக, விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ரகசிய தகவலின் அடிப்படையில், விமானத்தில் இருந்த பயணிகள் உடைமைகளை, சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது 3 ஆண் பயணிகள் மறைத்து வைத்து எடுத்து வந்த அமெரிக்க டாலர், சவுதி ரியால் மற்றும் யுஏஇ திர்காம்ஸ் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் கரன்சி நோட்டுகள் சிக்கியது. இந்த கரன்சி நோட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கரன்சி நோட்டுகள் ஆய்வு செய்ததில், இதன் இந்திய ரூபாய் மதிப்பு 37 லட்சத்து 93 ஆயிரத்து 845 என தெரிய வந்தது. வெளிநாட்டு கரன்சிகளை எடுத்து வந்த 3 பேரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.