திருச்சி:திருச்சி மாநகரில்பிரதான கடைவீதிகள், மார்க்கெட் சந்தைகளில் பச்சை கிளிகள் போன்ற பாதுகாக்கப்பட்ட பறவைகள் விற்பனை செய்வதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததுள்ளது. அதனை தொடர்ந்து திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷின் வழிகாட்டுதலின்படி, திருச்சி மாவட்ட வன அலுவலர் கிரண் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர், திருச்சியில் உள்ள மலைக்கோட்டை கடைவீதி, பெரிய கடைவீதி , சின்ன கடைவீதி காந்தி மார்க்கெட், பொன்மலை சந்தை, உறையூர் மீன் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக தொடர் கண்காணிப்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அதனை தொடர்ந்து திருச்சி மாநகர் பகுதிக்கு உட்பட்ட பாலக்கரை கீழப்புதூர், குருவிக்காரன் தெருவில் அதிரடியாக சோதனை செய்தனர். அச்சோதனையில் தனுஷ், சகாய ஜென்சி, சாந்தி, மணிகண்டன், கார்த்திக் ஆகியோர் தங்களது வீட்டில் விற்பனைக்காக 108 பச்சைக்கிளிகள் மற்றும் 30 முனியாஸ் பறவைகள் ஆகியவை விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், கிளிகள் பிடிக்க வைக்கப்பட்டிருந்த கூண்டுகள், வலைகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், பச்சைக் கிளிகள் மற்றும் முனியாஸ் பறவைகளை வேட்டையாடி கொடுத்தது கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த மேட்டுமருதூர் கிராமத்தை சேர்ந்த திருஞானம் என்பவர் என்பது தெரியவந்துள்ளது.