திருச்சி மாவட்டம் மணப்பாறை நகர் பகுதியில் 24 மணிநேரமும் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள், கஞ்சா விற்பனை நடைபெற்றுவருவதாக மாவட்ட காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் உத்தரவின் பேரில், துணை கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் தலைமையில் மணப்பாறை நகர் பகுதிகளில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
இதில், சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்துவந்த ராஜா, வெள்ளைச்சாமி, விஜயகுமார் ஆகிய மூவரும் காவல் துறையினரிடம் கையும் களவுமாகச் சிக்கினர். மேலும் அவர்களிடமிருந்த 284 மதுபாட்டில்களும் ரூ.7720 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் அன்று மாலை காவல் கண்காணிப்பாளரின் நேரடி தனிச் சிறப்புக் குழு காவல் படையினர் மணப்பாறை பூங்கா சாலை பகுதியில் கஞ்சா விற்பனை செய்துவந்த மகாலட்சுமி, நாகராஜ் ஆகியோரை கைது செய்தனர்.