திருச்சி மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5:30 மணியளவில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணி 77 மணி நேரத்தைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. சுஜித்தை மீட்க ஆழ்துளைக் கிணற்றிற்கு அருகில் ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டுவரும் பணி 24 மணி நேரத்தைக் கடந்து நடைபெற்றுவருகிறது.
குழந்தையை மீட்க பல்வேறு தரப்பினர் செய்த முயற்சி தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து, ரிக் இயந்திரம் மூலம் தோண்டப்பட்ட குழிக்குள் உள்ள 55 அடிக்கு கீழ் மண், பாறைகளின் தன்மை குறித்து ஆய்வு செய்வதற்காக, தீயணைப்பு வீரர் அஜீத்குமார் பாதுகாப்பு உபகரணங்களுடன் உள்ளே சென்று வெளியே வந்தார்.