திருச்சி: சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து கடலூர், விருத்தாசலம், அரியலூர், பெரம்பலூர், கரூர் மற்றும் புற நகர் பகுதிகளான சமயபுரம், குழுமணி, பெட்டவாய்த்தலை, குளித்தலை, முசிறி, துறையூர், லால்குடி, துவாக்குடி, திருவெறும்பூர், BHEL, நவல்பட்டு ஆகிய ஊர்களுக்கு உள்ளூர், தனியார் மற்றும் அரசுப்பேருந்துகள் நூற்றுக்கணக்கில் இயக்கப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக இந்தப் பேருந்து நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் ஆதரவற்றோர் மற்றும் பேருந்தை தவற விடுபவர்கள், குறிப்பிட்ட நேரத்திற்கு பேருந்து கிடைக்காதவர்கள், யாசகர்கள் இரவு நேர கடை நடத்தி வருபவர்கள், இரவு நேரங்களில் சத்திரம் பேருந்து நிலைய நடைமேடையில் படுத்து உறங்குவது வழக்கம். பின்பு பேருந்து வந்தவுடன் அவர்களது சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் செல்வார்கள்.
இதேபோல் நேற்று இரவு அடையாளம் தெரியாத பெண் ஒருவர், பேருந்து நிலைய நடைமேடையில் அங்கு படுத்து உறங்கி உள்ளார். பேருந்து நடை மேடையில் படுத்து உறங்கிய அந்தப் பெண்ணை இரவு நேரப் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் லத்தியால் கடுமையாக தாக்கிய வீடியோ தற்பொழுது சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.