திருவள்ளூர்:ஏமன் நாட்டில் வேலைக்கு சென்ற தங்களது மகன் மீது செய்யாத தவறுக்கு பழி சுமத்தி தனி அறையில் அடைத்து வைத்து கொடுமை படுத்துவதாகவும், அவரை உடனடியாக மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரது தந்தை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமை அடுத்த கருணாகரச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் வில்லியம் லூயிஸ். இவரது மகன் தினகரன் விஜய்(28). இவர் திருச்சியில் உள்ள கெவின் டிராவல்ஸ் என்ற நிறுவனம் மூலமாக சென்னை எழும்பூரில் இயங்கி வரும் டிராவல்ஸ் நிறுவனத்தின் கீழ் ஏமன் நாட்டிற்கு கார் வாஷ் செய்யும் பணிக்கு சென்றுள்ளார். அந்த வகையில், தினகரன் விஜய் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் தேதி ஏமன் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இங்கிருந்து செல்லும்போது அவருக்கு கார் வாஷிங் வேலை மட்டுமே கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், அவர் வேலை செய்யும் இடத்துக்கு விபத்தில் சிக்கிய கார் ஒன்று வாஷ் செய்வதற்காக வந்துள்ளது. ஆனால், அந்த காரை தினகரன் விஜய் தான் சேதப்படுத்தியதாக அந்த கார் வாஷ் கடை உரிமையாளர் குற்றம் சாட்டியுள்ளார். அதோடு, அந்த குற்றத்தை ஒப்புகொள்ளுமாறும், இதற்கான பணத்தை மாத சம்பளத்தில் இருந்து கழித்துக்கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார். இருப்பினும், செய்யாத தப்பை எப்படி ஒப்புக்கொள்ள முடியும் என்று கூறிய தினகரன் விஜய் மறுத்துள்ளார். இதனால் அவரை உரிமையாளர் தனி அறையில் வைத்து துன்புறுத்துவதாக சொல்லப்படுகிறது.