திருச்சி: ஜீயபுரம், முக்கொம்பு அருகே உள்ள ராமவாத்தலை வாய்க்கால் கரையில் டிசம்பர் 5ஆம் தேதி பிறந்த பச்சிளம் குழந்தை கிடந்துள்ளது. இதுகுறித்த பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் ஜீயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று உயிருக்கு போராடிய ஆண் குழந்தையை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். குழந்தையை பெற்றெடுத்தது யார் என விசாரணை நடந்து வருவதாக போலீசார் கூறினர்.
ஆனால் திடீர் திருப்பமாக 19 வயதான பெண் ஒருவர், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உடல்நிலை மோசமடைந்ததால் மரணவாக்குமூலம் பெற முடிவு செய்தததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் மாவட்ட மாஜித்திரேட் மருத்துவமனைக்கு நேரில் சென்று அந்த பெண்ணிடம் மரண வாக்குமூலம் பெற்றார். இதனைத் தொடர்ந்து அந்த பெண் மருத்துவமனையிலேயே மரணமடைந்தார்.
பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையிலும், விசாரணையின் அடிப்படையிலும் அதிர்ச்சியூட்டும் சில தகவல்கள் வெளிவந்தன. திருச்சி போலீசார் தெரிவித்த தகவலின்படி உயிரிழந்து போன பெண்ணின் குழந்தைதான் முக்கொம்பில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை என்பது தெரியவந்துள்ளது.